ஒரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை
ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல
மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக,
கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை
விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது.
தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா
நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு
கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா
தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ்
பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும்.
உலகில் எத்தனை பேனா நண்பர்கள் இருந் தனர் என்ற
புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால், இ-மெயில் தொழில்நுட்பம் இதைப்
பெருமளவு குறைத்திருக்கும். இ-மெயில் என்பது மனிதர்களுக்கு இரண்டு கைகள்போல
மாறி விட்டது. 'இது என்னோட போன் நம்பர். ஆனா, இ-மெயில்தான் பெஸ்ட் பிரதர்'
என்று சொல்லும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.
எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்தித் தொழில்நுட்பம்
இ-மெயில் போலத்தான் என்றாலும், சுருக்கமான தகவல்களைத் தொடர்ந்து முன்னும்
பின்னும் பகிர்ந்துகொள்ள வசதியானது. இ-மெயிலுக்கு அடுத்து கலக்கலாக வந்த
சாட் தொழில்நுட்பம் இன்னும் அற்புதம். ஆன்லைனில் இருக்கும் நண்பனிடம்,
'டேய், என்னடா பண்ற?' என்று கேட்க முடிகிறது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை
மேற்கண்ட பல தொழில்நுட்பக்கூறுகளை ஒன்றாகத் தொகுத்துக் கொடுக்கிறது. இதனால்
நட்பு வட்டத்துடன் தொடர்பில் இருக்கவும், புதிய தோழமைகளைக் கண்டறியவும்
பெருமளவில் இந்தச் சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன.
பலதரப்பட்ட நட்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதற்கான டிப்ஸ்:
முதலில் இ-மெயில்...
50 சதவிகித இ-மெயில்கள் தவறாகப்
புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. முக்கியமாக, ஆங்கிலத்தில்
எழுதும்போது முழு வாக்கியங்களையும் UPPER CASE
எழுத்துக்களில் எழுதுவதைத் தவிருங்கள். அது நீங்கள் எழுத்தில் கத்துவது
போன்ற உணர்வைக் கொடுக்கலாம். வார்த்தைகளின் தொனியில் கவனமாக இருங்கள்.
எழுதிய வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் உங்களை அறியாமலேயே இருப்பதைக்
கண்டறிய டோன்செக் (http://www.tonecheck.com/) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நினைவிருக்கட்டும்... ஆறாதே இ-மெயிலால் சுட்ட வடு.
வதவதவெனக் கண்ணில் கிடைக்கும் பொன்மொழிகளையும்,
புகைப்படங்களையும், ஜோக்குகளையும் அனுப்பாதீர்கள். அது உங்களது
நேரத்தையும், அவரது நேரத்தையும் சேர்த்துக் காலி செய்யும். அவசியம் தவிர,
நண்பர் ஒருவருக்கு ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு இ-மெயில் மட்டுமே
அனுப்புங்கள். இதன்மூலம், அவரது இ-மெயில் பெட்டி நிறைந்து வழியாமல்,
கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் மானாவாரியாக அனுப்பும்
இ-மெயில்களால் கடுப்பாகி, உங்கள் இ-மெயில் விலாசத்தையே 'குப்பை' ( Spam ) என நட்பு வட்டம் குறித்து வைக்கக்கூடும். காரணம், அதிகமானவர்கள் அப்படிக் குறித்துவைத்தால், gmail, hotmail போன்ற இ-மெயில் சேவை தொழில்நுட்பங்கள் உங்கள் இ-மெயிலைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடிவிடும் முகாந்தரம் உண்டு.
பல நண்பர்களுக்குப் பொதுவான இ-மெயில் அனுப்பும்போது, எல்லோருடைய விலாசங்களையும் To அல்லது CC (Carbon Copy)
பகுதியில் கொடுப்பது விவேகமான செயல் அல்ல. யார் யாருக்கு அவர்கள் உங்களது
மெயிலை ஃபார்வர்ட் செய்வார்கள் என்பது தெரியாது. இ-மெயில் விலாசங்களைச்
சேகரித்து சகட்டு மேனிக்கு மார்க்கெட்டிங் செய்பவர்கள் கையில் அனைவரின்
இ-மெயில் முகவரிகளும் கிடைத்து, நண்பர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.
அதற்குப் பதிலாக, உங்களுடைய இ-மெயில் விலாசத்தையே To பகுதியிலும் போட்டு, BCC (Blind Carbon Copy) பகுதியில்
மற்ற அனைவரின் இ-மெயில் விலாசங்களும் கொடுங்கள். இப்படிச் செய்தால்,
எந்தக் கொம்பனாலும் இ-மெயில் விலாசங்களைத் திருட முடியாது.
இ-மெயில் அனுப்பிய உடனே, போனிலும் அழைத்து
'மச்சான், இ-மெயில் பார்த்தியா? என்ன அனுப்பியிருக்கேன்னா...' என்று
ஆரம்பித்து, இ-மெயில் முழுவதையும் வாசித்துக் காட்டுவது அநாவசியம் +
அநியாயம்.
இ-மெயிலின் கீழ்ப் பகுதியில் உங்களது மற்ற தொலைபேசி, வீட்டு முகவரி போன்ற தொடர்பு தகவல்களைக் கொடுப்பது சிறந்தது.
சமூக ஊடக வலைதளங்களில் தொடர்புகளை நிர்வகிப்பது எப்படி?
உங்களுக்குத் தெரியாதவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் முன்னால், அவர் வில்லங்கமான ஆசாமியா, அல்லது போலியான profile போன்றவற்றை
தீரப் பரிசோதித்து இணையுங்கள். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள்,
வீடியோக்கள் அனைவரும் பார்ப்பது மட்டுமன்றி, அவை நகல் எடுக்கப்பட்டு பல
இடங்களில் சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக மிக மிகக் கவனம்
தேவை. அதிபர் ஒமாபா இதைப்பற்றி இளைஞர்களிடம் பேசுவதை இந்த உரலியில்
பாருங்கள் http://www.youtube.com/watch?v=Awwp9BFfAY8
உருப்படி இல்லாத தகவல்களை, புள்ளிவிவரங்களை
ஃபேஸ்புக் சுவரில் எழுதிவைப்பதைத் தவிர்க்க முயலுங்கள். நீங்கள் எழுதுவது
எல்லாம், உங்கள் நண்பர்களின் பக்கங்களிலும் வரும் என்பதால், இதிலும் கவனம்
அவசியம்.
பார்க்கும் தகவல்கள் ஏதாவது சுவாரஸ்யமானதாக இருந்தால், 'Like' செய்வது தவறு அல்ல. ஆனால், பார்க்கும் எல்லாவற்றையும் 'Like' செய்வது நல்லதல்ல.
பின்னூட்டங்கள் இடும்போதும் கவனத்துடன் இடுங்கள்.
கிண்டலாகவும் கோபமாகவும் பின்னூட்டங்கள் இடுவது தவறு என்று சொல்ல
மாட்டேன். நீங்கள் பின்னூட்டம் இடும் குறிப்பிட்ட நண்பருடன் உங்களுக்கு
நல்ல புரிதல் இருக்கலாம். ஆனால், நீங்களும் உங்கள் நண்பரும் தனி அறை யில்
இல்லை என்பதை மனதில்கொள்ளுங்கள். அவரது நட்பு வட்டத்தில் உங்களைத் தெரியாத
நபர்கள் இருக்கலாம். உங்களது நட்பு வட்டத்தில் அவரைத் தெரியாத நண்பர்கள்
இருக்கலாம். உங்களது பின்னூட்டங்கள் உங்களைப்பற்றியோ, அல்லது
நண்பரைப்பற்றியோ தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்.
உங்களுக்கு இதில் லேசாகச் சந்தேகம் இருந்தால் அவருக்கு நேரடியாக பிரத்யேக
மெயில் அனுப்புங்கள்.
இணைய நட்பை நிர்வகிப்பது எப்படி?
'முகநக நட்பது நட்பன்று' வள்ளுவம் சொல்கிறது
வாழ்க்கை முழுதும் தொடரும் நட்பின் இலக்கணத்தை. பள்ளி, கல்லூரி, அலுவலகம்,
சமூகம் என அனைத்து நிலைகளிலும் நட்பு என்பது சமூக அமைப்பில் ஓர் உறவு என்ற
அடையாளத்தைத் தாண்டி, சமூக குணநலனாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில்
நட்பு இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி மக்களுடன் நெருங்கிப்
பழகாமல் ஒட்டுதல் இல்லாமல் இடைவெளிவிட்டு ஒதுங்கி வாழ்பவர்களை 'ஆஸ்பர்ஜெர்'
என்று வரையறுக்கிறது உளவியல்.
கை குலுக்கி, கன்னம் கிள்ளி, முதுகு தட்டி,
கண்ணாமூச்சி ஆடி, சிறு வயதில் தோன்றுகிற நட்பு காலப்போக்கில்
காலாவதியாகிவிடுகிறது. இப்போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் நண்பர்களைப்
பார்க்க முடியாத பணிச் சூழலில் குறுஞ்செய்திகள், இ-மெயில்கள்தான் நட்பைக்
காக்க உதவுகின்றன. முகத்துக்கு முகம் பார்த்து, தோள் தாங்கி, மடி சாய்ந்து,
சிரித்து வளர்த்த இந்த நட்பையே நம்மால் சரியாக நிர்வகிக்க முடியாதபோது,
உலகின் எங்கோ ஒரு மூலையில் இணை யம் என்ற கலங்கிய குட்டையில் தன் முகம்
மறைத்து நண்பன் என்று நம்மிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனிதர்களையும்,
உண்மையிலேயே அன்புக்காக ஏங்கும் இணைய இதயங்களையும் எப்படி இனம்
கண்டுகொள்வது?
பொதுவாக, இணைய நட்பு என்பதை உண்மையான நண்பர்கள்,
பிசினஸ் அசோஸியேட்ஸ், க்ளையன்ட்கள் - நேற்று, இன்று, நாளை, முன்னாள்
நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள், சர்க்கிள் ஆஃப் ஸ்பியர், தெரியாதவர்கள்,
பொது விருப்பங்கள் என்று எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு இணைய நட்பு வட்டத்தையும் எப்படி நிர்வகிக்கலாம்உண்மையான நண்பர்கள்
உங்களைப்பற்றி
அறிந்தவர்கள் என்ற பெர்சனலான எல்லைக்குள் வருபவர்கள். அவர்களைப்பற்றி
நீங்களும் முழுவதுமாக அறிந்திருப்பீர்கள். தினமும் ஒரு முறையாவது
இவர்களுக்கு நலம் விசாரித்தோ, பணிபற்றி விசாரித்தோ, குடும்பம்பற்றியோ
அக்கறையுடன் நலம் விசாரித்து மெயில்கள் அனுப்புவது நலம்.
கவனிக்க...
இவர்கள்
நெருக்கமான நண்பர்கள். ஆதலால் ஃபார்மலாக மெயில் அனுப்புவது தேவை இல்லை.
அவரை நேரில் சந்தித்தால், எப்படி உரையாடுவீர்களோ அந்தத் தொனியிலேயே
மெயில்கள் இருப்பது உங்கள் அன்பு மனதை அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக்
காட்டும்.
பிசினஸ் அசோஸியேட்ஸ்
வியாபாரம் சம்பந்தமாக உங்களுடன் தொடர்பு
வைத்திருப்பவர்கள் இவர்கள். ஒரு நாளில் மிக அதிகமாக இ-மெயில் பரிவர்த்தனை
இவர்களுடன்தான் நடக்கும் என்பதால், ஒவ்வொரு இ-மெயில் அனுப்பும் போதும்
கவனமாக இருக்க வேண்டும். கவனம் இன்றி சிறு தவறு நடந்தாலும் உங்கள் உறவு
பாதிக்கப்படும். விளைவாக பிஸினஸும் பாதிக்கப்படும்.
கவனிக்க...
ஒவ்வொரு முறை மெயில் அனுப்பும்போதும் விளித்தல் முறை சரியாக இருக்க வேண்டும். ஃபார்மலாக இருப்பது மிகவும் முக்கியம்.
பெயர், பதவி சரியாகக் குறிப்பிட வேண்டும்.அவ்வப்போது ஃபாலோ-அப் மேற்கொள்வது நல்லது.
முக்கியமான விஷயங்கள் தாமதமானால் 'ரிமைண்டர்'கள் அனுப்புவது நலம்.
க்ளையன்ட்டுகள் - நேற்று, இன்று, நாளை
எப்போதும் க்ளையன்ட்டுகளுடன் சுமுக உறவுடன்
இருப்பது முக்கியம். காரணம், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள், நேற்று
இருந்த வாடிக்கையாளர்கள் மூலம் வந்தவர்கள். நாளை வரப்போகும்
வாடிக்கையாளர்கள், இன்று இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலம் வருபவர்கள்.
கவனிக்க..
நம்மோடு
வியாபாரத்தில் இருந்த முந்தைய நிறுவனங்களில் சில அதிகாரிகள் இடம்
மாறியிருக்கலாம். தொடர்புகள் அற்றுப்போய் சில காலத்துக்குப் பிறகு மீண்டும்
தொடர்புகொள்ளும்போது அவர்களின் பதவியை மட்டும் பொதுவாகக் குறிப்பிட்டு,
இ-மெயில்கள் அனுப்பலாம்.
உங்கள்
நிறுவனத்தில் யார் யார், எங்கெங்கே என்ன பதவியில் இருக்கிறார்கள் என்பதை
இன்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும்விதமாக
'இன்ஃபர்மேஷன் போர்ட்டல்'கள் வைத்திருப்பது உங்கள் மீதான நம்பகத்தன்மையை
அதிகரிக்கும்.
தகவல் கேட்டு மெயில் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரங்களுக்குள் விவரங்களை அனுப்பிவைப்பது நன்று.
முன்னாள் நண்பர்கள்
சில காலம் பழகிவிட்டு, சூழ்நிலைகளால் நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இந்த வகை வட்டத்தில் வருபவர்கள்.
கவனிக்க...
உங்கள் நட்பின் ஆழத்தைப் பொறுத்து மெயில்கள் அனுப்பலாம்.அவர் என்றோ ஒருநாள் உங்களுக்கு இழைத்த தவறை நினைவுபடுத்தும்விதமாக இ-மெயில்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
இவ்வளவு நாள் ஒரு போன்கூட செய்யாதவர் திடீரென்று உங்கள் இ-மெயில் கேட்டால், அலுவலகப் பயன்பாட்டுக்கு உள்ள இ-மெயில் முகவரியைத் தருவதைவிட பெர்சனல் இணைய முகவரியைத் தருவது நலம்.
சமூக வலைதள நண்பர்கள்
ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்கட் என சமூக
வலைதளங்களில் உலவும் நண்பர்கள் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது
இல்லை. உங்கள் நண்பர், அவருடைய நண்பர், நண்பரின் நண்பர் என்று உங்களுக்கு
அறிமுகம் இல்லாதவர்களும் கைகுலுக்குவதால் இந்த நட்பு வட்டத்தில் மிகவும்
கவனமாக இருக்க வேண்டும்.
கவனிக்க...
முகம் தெரியாத நண்பர்களுடன் வெகு நேரம் சாட் செய்ய வேண்டாம்.நீங்கள் இடும் தகவல்கள் அனைவராலும் உடனுக்குடன் படிக்கப்படும் என்பதால், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அதேபோல ஒரு நண்பரைப்பற்றி இன்னொருவரின் 'ஸ்கிராப்'பில் போஸ்ட் செய்ய வேண்டாம்.
சர்க்கிள் ஆஃப் ஸ்பியர்
இதை இப்படியும் சொல்லலாம். தெரிந்தவர்கள், ஆனால்
நண்பர்கள் அல்ல. ஏதோ ஒரு விழாவில், அல்லது பிசினஸ் மீட்டிங்கில் அல்லது
காலேஜ் கல்ச்சுரல்ஸில் சந்தித்திருப்பீர்கள். டைம்பாஸுக்காகப் பேச்சு
வளர்ப்பீர்கள். சும்மானாச்சுக்கும் 'உங்கள் இ-மெயில் ஐ.டி-யைக்
கொடுங்களேன்' என்பீர்கள். அவரும் தருவார். நீங்களும் தருவீர்கள்.
உங்களுக்கு அவரைத் தெரியும். அவருக்கு உங்களைத் தெரியும். ஆனால்,
'உண்மையில்' ஒருவரைப்பற்றி ஒருவர் ஆழமாகத் தெரிந்துவைக்காமல் இருப்பீர்கள்.
கவனிக்க...
ஒன்றுக்கும் உதவாத மெயில்களை 'ஜஸ்ட் லைக் தட்' ஃபார்வேர்டு செய்வார்கள். அதை நீங்களும் ஃபார்வேர்டு செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.
தெரியாதவர்கள்
எல்லா விளம்பர நிறுவனங்களிடத்திலும் உங்களின்
இ-மெயில் முகவரி இருக்கும். இதை வாங்கிக்கொள்ளுங்கள், அதை
வாங்கிக்கொள்ளுங்கள் என்று மெயில்களை அனுப்புவார்கள். இவர்கள் இந்த
வகைக்குள் வருபவர்கள்.
கவனிக்க...
முடிந்தவரை இப்படிப்பட்ட இ-மெயில்களுக்குப் பதில் அனுப்பாமல் இருப்பது நல்லது.
பொது விருப்பங்கள்
ஷகிராவின் பாப் பாடல்களில் உங்களுக்கு விருப்பம்
இருக்கலாம். அல்லது நேஷனல் ஜியாக்ரஃபியின் போட்டோக்களுக்கோ ரசிகராக
இருக்கலாம். உங்களைப் போன்றே இதே அலைவரிசையில் இருக்கும் நபர்கள்
இணையத்தில் இருப்பார்கள். இவர்களை எல்லாம் 'கம்யூனிட்டி' என்பதற்குக் கீழே
கொண்டு வர முடியும்.
கவனிக்க...
இத்தகைய கம்யூனிட்டிகளில் இணைவது உங்களுக்குத் துறை சார்ந்த நெட்வொர்க்கை அதிகமாக்கும்.
நன்றி : விகடம்.காம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.