1

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)

Friday, November 12, 2010

வாழ்வின் நிஜ முகங்கள்

                  வாழ்க்கையென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகமூடிகளைக் காட்டவென வைத்திருக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் அழகாகவும், கோரமாகவும் தனது முகத்தை மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகங்களில் புன்னகையைத் தேடியபடியே ஒவ்வொருவரது பயணமும் நீடிக்கிறது அலைச்சலாகவும் நேரானபாதையிலும்.

                  உலகில் இரு பிரிவினரே உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் ஒரு பிரிவினர். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மற்றப் பிரிவினர். தொடரும் ஒவ்வொரு பிரிவும் இவ்விரண்டு பிரிவுகளிலிருந்தே கிளைகளாகப் பிரியத் தொடங்குகின்றன. அவை எண்ணற்ற கிளைகளாகி வளர்ந்துகொண்டே செல்கின்றன. ஒவ்வொரு கணத்திலும் மரணம் பின் தொடரும் வாழ்வின் பாடல் ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

                   பசி என்ற உணர்வுதான் உயிர்கள் எல்லாவற்றையும் இயங்கச் செய்துகொண்டிருக்கிறது. பசிக்குப் பிறகுதான் அனைத்தும். பசியென்ற ஒன்று இல்லையெனில் உலகத்தின் இயக்கமும், உயிர்களின் தேடலும் என எல்லாமே மந்தமாகித் தேய்ந்து போயிருக்கும். எமது இன்றைய நாளின் தேவைக்கான உணவு இலகுவாகக் கிடைத்துவிடுகிறது. எமது இன்றைய தேவைக்கான துணிகள், நிம்மதியாக ஓய்வெடுக்க ஒரு கூரை என எல்லாமே கிடைத்துவிடுகின்றன. ஆகவே இலகுவாகக் கிடைக்கும் அவற்றின் அருமையை நாம் உணர்வதில்லை.

                      நான் இதனை எழுதும் இக் கணத்தில், நீங்கள் இதனை வாசிக்கும் இக் கணத்தில் வாழ்க்கையின் அருமையான புன்னகையுடனான முகமே நமக்குத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதே கணத்தில் எத்தனை உயிர்கள் வாழ்வின் கோர முகத்தைத் தரிசித்துக் கொண்டிருக்கும்? இதே கணத்தில் எத்தனை உயிர்கள் தங்களது ஒருவேளை உணவினை குப்பைத் தொட்டிகளில் தேடிக் கொண்டிருக்கும்? குளிருக்குப் போர்வையோ, வெயிலுக்கு ஒதுங்கியிருக்கோ ஒரு நிழலோ இல்லாமல் எத்தனை உயிர்கள் தவித்துப் போய் துயரப்பட்டுக் கொண்டிருக்கும்? வெப்பம் உமிழும் கொடும் பாறைத் தரைகளில் வெற்றுக் கால்களோடு அலையும் உயிர்கள் எத்தனை? தாகத்துக்கு ஒரு மிடறுத் தண்ணீர், எழுதப் படிக்க வசதி, ஒழுகாத, ஒழுங்கான ஒரு குடிசையற்று எத்தனை உயிர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும்?
















இவர்களைக் குறித்தும் சிந்திப்போம்..
உதவுவோம்...

நன்றி : எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை